சென்னை ஐகோர்ட்டுக்கு நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள, நான்கு புதிய நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான கொலீஜியம் சமீபத்தில் அனுப்பியது. இதை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம், வக்கீல்கள் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத் சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த 4 வக்கீல்களை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, புதிய நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கிறார்கள். தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, 4 புதிய நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசவுள்ளார். இதற்கான அறிவிப்பாணையை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் வெளியிட்டுள்ளார்.

Related Stories: