சோழவந்தானில் இடியும் அபாயத்தில் சுற்றுச்சுவர்: பொதுமக்கள் அச்சம்

சோழவந்தான்: சோழவந்தானில் ஆபத்தான தொலைபேசி நிலைய சுற்றுச்சுவரால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சோழவந்தானில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலையம் நகரி சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்ட இந்நிறுவனம் தற்போது தனியார் அலைபேசியின் வரவாலும், 4 ஜி இணையதள சேவை உள்ளிட்ட சேவைக் குறைபாடுகளாலும் குறைந்துவிட்டது. ஊழியர்களும் குறைந்த அளவே உள்ளனர். சுமார் 30 வருடங்களுக்கு முன் அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு சுமார் 15 அடி உயரத்தில் மின் வேலியுடன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இந்தச் சுவர் முழுவதும் சிதிலமடைந்து சாலையில் சாயும் நிலையில் உள்ளது. இவ்வழியே அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள், தினமும் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தின் வாசல் முன்பு அடர்ந்து வளர்ந்துள்ள புற்களை கூட அகற்ற இயலாத நிலையில் செயல்படும் நிர்வாகம், ஆபத்தான சுவரையும் அகற்றாமல் உள்ளனர். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>