வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: தடை நீங்கியதால் களைகட்டியது மாமல்லபுரம்

சென்னை: உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்துக்கு 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சர்வதேச அளவில் மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சுற்றுலா தலம் மூடி சீல் வைக்கப்பட்டு பயணிகள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுலா தலம் திறக்கப்பட்டு வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்து, உள்நாட்டு பயணிகள் மட்டும் கண்டு களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, தினமும் உள்நாட்டு பயணிகள் மட்டும் வந்து இங்குள்ள புராதன சின்னங்களை கண்டு ரசித்து தங்கள் செல்போனில் படம் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா நாட்டை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண், பெண் என மொத்தம் 21 பேர் நேற்று மதியம் மாமல்லபுரம் வந்தனர்.

பின்னர், அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், கடந்த 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வருகை தந்ததை அறிந்த உள்நாட்டு பயணிகள், பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Related Stories: