நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் தடுப்பணை, கிணறுகள் அமைக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் புதிதாக தடுப்பணைகள், நீர்நிலைகள், கதவணைகள் அமைக்கப்படும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 500 இடங்களில் தடுப்பணைகள், 9 நீர்நிலைகள், 6 கதவணைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியில் நீர்வளத்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும், நிலத்தடி நீரை பெருக்கும் வகையில், தடுப்பணை, படுகை அணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், திருவாரூர், நாகை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக  கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும், அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் நீர்வளத்தை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து நிலவளநீர்வள ஆதார விவர குறிப்பு மையத்திடம் தரப்பட்டுள்ளது.

அவர்கள், நிலத்தடி நீர் மட்டம் குறைவான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக தடுப்பணைகள் அமைப்பதா, படுகை அணைகள் அமைப்பதா, நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதா என்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும், திட்ட அறிக்கைகளில் மாற்றம் இருந்தால் அது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இவர்கள் தடுப்பணைகள் அமைக்க ஒப்புதல் அளித்த பிறகு தமிழக அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: