இன்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் குறைந்தது பிஇ, பிடெக்கில் 62 ஆயிரம் இடங்கள் காலி: மாணவர்கள் இல்லாமல் தள்ளாடும் கல்லூரிகள்; அரசு கல்லூரிகளும் நிரம்பவில்லை

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கு நடந்த கவுன்சலிங்கில், , 62 ஆயிரத்து 683 இன்ஜினியரிங் இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. பிஇ, பிடெக் படிப்புகளில், இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கை பொறுத்தவரையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரையும் 4 சுற்றுகளாக கவுன்சலிங் நடந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடங்களில் 7324 மாணவர்களும், சிறப்பு பிரிவு மாணவர்கள் 473 பேரும், முதல் சுற்றில் 11,185 மாணவர்களும், இரண்டாவது சுற்றில் 20 ஆயிரத்து 363 மாணவர்களும், 3வது சுற்றில் 23 ஆயிரத்து 327 மாணவர்களும், 4வது சுற்றில் 26 ஆயிரத்து 515 மாணவர்கள் என மொத்தம் 89 ஆயிரத்து 187 பேர் பொதுப்பிரிவு கவுன்சலிங்கில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ, பிடெக் படிப்புகளுக்கு மாணவர்களை ஒற்றைச் சாளர முறையின் கீழ்  சேர்க்க ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், தற்போது 62 ஆயிரத்து 683 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது. பொதுப்பிரிவுக் கவுன்சலிங் நடந்து முடிந்துள்ள நிலையில், 7 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட எந்த கல்லூரியிலும் சேரவில்லை. 7 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவும், 51 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 16 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  இதனால் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. எப்படி கல்லூரியை நடத்துவது என்று தள்ளாடி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் இடங்கள் காலியாகவே உள்ளன.

எப்போதுமே இந்த கல்லூரிகளில் சேர்க்கை முடிந்துவிடும். ஆனால், இந்த முறை நிரம்பவில்லை என்பது அரசு கல்லூரிகளில் பிஇ படிக்கவும் மாணவர்களிடம் ஆர்வம் இல்லாதது தெரியவந்துள்ளது.  பொதுப்பிரிவு கவுன்சலிங் முடிந்த பிறகும், காலியாக உள்ள இடங்களுக்கு துணை கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் 20ம் தேதி வெளியாக உள்ளது. 20 மற்றும் 21ம் தேதிகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய் யலாம். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 22ம் தேதி செய்யப்படும். 23ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது.

Related Stories:

More
>