சென்னை விமானநிலையத்தில் ரூ.1.16 கோடி தங்க பேஸ்ட் பறிமுதல்: 5 பேர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்க பேஸ்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்றிரவு துபாயில் இருந்து சென்னை வந்த விமானம், சார்ஜாவில் இருந்து வந்த விமானம் ஆகியவற்றில் வந்த 5 பயணிகளின்மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியிடத்தில் வைத்து சோதனை நடத்தினர். இதில் சென்னை, ராமநாதபுரம், ஆந்திரா மற்றும் திருச்சியை சேர்ந்த 4 ஆண்கள், ஒரு பெண் ஆகிய 5 பேரும் தங்களின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 10 பார்சல்களை கைப்பற்றினர். அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ரூ.1.16 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்க பேஸ்ட் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெண் உள்பட 5 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>