தேவையில்லாமல் அதிக எதிர்மனுதாரர்களை சேர்ப்பதா? ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கபடும்: பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பொது நல ஆர்வலர் ராதாகிருஷ்ணன் (கோயில்கள் தொடர்பான வழக்குகளை தொடர்பவர்)  தாக்கல் செய்த மனுவில், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளுக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 10, 2015ம் ஆண்டு ஏப்ரல் 8 மற்றும் ஜூன் 20 அன்று வருவாய், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கோவில்களின் நிலை, அதன் சொத்துக்களைக் கண்டறிய சென்றேன். ஆய்வின் போது மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களின் சொத்துக்கள், அந்தந்த கோவில்களுக்குப் பக்தர்களால் வழங்கப்பட்டது. அவற்றை அடையாளம் காண முடியவில்லை.

முறையான பதிவுகள், ஆவணங்கள் இல்லாததால் நிலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. எனவே முறையான ஆவணங்களை அரசு தெரிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொது நல மனு நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மனுதாரரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை துஷ்பிரயோகம் தவிர வேறில்லை.

இவ்வழக்கில் எதற்காக 44 பேரை எதிர் மனுதாரராக இணைத்துள்ளீர்கள், அதற்கான அவசியம் என்ன? வழக்கிற்குத் தொடர்புடையவர்களை மட்டுமே எதிர் மனுதாரர்களாக இணைக்க வேண்டும். இது தொடர்பாக மனுதாரருக்கு அவரது வழக்கறிஞர் எடுத்துரைக்க வேண்டும். இதை மீண்டும் செய்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’’ என்று எச்சரித்தனர். இதையடுத்து அவர் தொடர்ந்து மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories: