நவம்பர் 1ம் தேதி முதல் தான் அனுமதி பொதுமக்கள் இன்று மெரினாவிற்கு செல்ல தடை: சென்னை மாநகராட்சி, காவல்துறை தகவல்

சென்னை: கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல நவம்பர் 1ம் தேதி முதல்தான் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இன்று கடற்கரைக்கு வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி, காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை, கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகளவில் கூடியதால் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது.

இதைதொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக, நவம்பர் 1ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி குறிப்பிடாமல், கடற்கரைக்கு செல்ல அனுமதி என்ற சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளால் இன்று மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் அதிகளவில் மக்கள் கூடும் வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க சென்னை மாநகராட்சி, காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்: நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமையான இன்று மற்றும் வரும் 24, 31ம் ஆகிய தேதிகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை உள்ளது. எனவே தடையை மீறி பொதுமக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: