பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100ஐ தாண்டியது

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 11வது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏறுமுகமாக இருக்கிறது. இதனால், நாட்டில் பெரும்பாலான நகரங்களில் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106க்கும், டீசல் ரூ.99க்கு மேலும் விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், பெட்ரோல் விலை ரூ.103ஐயும், டீசல் விலை ரூ.98ஐயும் தாண்டியுள்ளது. தமிழக அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 சலுகை அறிவித்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது.

அதே நேரத்தில் நடப்பு மாதம், கடந்த 1ம் தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. 4ம் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பின்னர், கடந்த 5ம் தேதியில் இருந்து தொடர்ந்து 11ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டது.  இதற்கிடையே, நேற்று முன்தினம் (14ம்தேதி) டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டம் குமராட்சி, கிருஷ்ணகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியது. இதில் குமாராட்சியில் டீசல் லிட்டர் ரூ.100.29 என்று விற்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 11வது முறையாக நேற்று அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை தலா 30, 33 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பெட்ரோல் ரூ.102.40ஆகவும், டீசல் ரூ.98.26 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதன் எதிரொலியாக விலைவாசி உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வால் ஏற்ற, இறக்கு கூலியை புக்கிங் ஏஜெண்டுகளே கொடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சூழலில் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. இதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலை, நிச்சயம் உயரும் வாய்ப்புள்ளது என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: