கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 4நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நீலகிரி: மண் சரிவால் 4நாட்களாக  நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு  சென்றது. கனமழையால் கல்லாறு-அடர்லி  ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த 10-தேதி காலை 7.10 மணிக்கு 180 சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜினுக்கு தேவையான தண்ணீர்  நிரப்பிவிட்டு மீண்டும் புறப்பட்டது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. ராட்சத பாறையும் விழுந்த கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார்.

ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கல்லார் ரயில் நிலையத்திற்கு ரயில் திரும்பி வந்தது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உத்தரவின்பேரில் மீண்டும் மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி

வந்தது.

 அங்கு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் அரசு பேருந்து மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ரயில் மண் சரிவு காரணமாக பாதியில் திரும்பியதால் அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: