மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு பரவலாக உள்ளது. நாட்டின் மின் உற்பத்தியானது 70 சதவீதம் நிலக்கரியை சார்ந்து இருப்பதால், நிலக்கரி பற்றாக்குறை பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலக்கரி மற்றும் மின்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம், ஒன்றிய அரசை மேற்கோள் காட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘அடுத்த 5 நாட்களில் நிலக்கரி உற்பத்தியானது தினமும் 19.4 லட்சம் டன்னிலிருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும். அனைத்து மாநிலங்களின் கோரிக்கையையும் ஒன்றிய அரசு பூர்த்தி செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘அனல் மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய முழு வீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகம் தற்போது 19 லட்சத்து 50 ஆயிரம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களில் 20 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். இந்தியாவில் இதற்கு முன் இந்தளவிற்கு நிலக்கரி விநியோகம் நடந்ததில்லை. சுரங்கப் பகுதிகளில் பருவமழை ஓய்ந்து விட்டதால் இனிவரும் நாட்களில் நிலக்கரி உற்பத்தி மேலும் அதிகரிக்கும். மின்வெட்டு ஏற்படாத அளவுக்கு நிலக்கரி விநியோகம் செய்யப்படும்’ என்றார்.

Related Stories: