சென்னை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களை நேரில் அழைத்து கமிஷனர் பிறந்தநாள் வாழ்த்து: கைப்பட எழுதிய பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களை அவர்களது பிறந்தநாள் அன்று, கமிஷனர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தும், கைப்பட எழுதிய பாராட்டு சான்றிதழை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கி வருகிறார். இது போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் காவல் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால் பதவியேற்ற பிறகு மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் குறைகளை களையும் வகையில் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேரடியாக இடைவிடாமல் குறைகளை மனுக்களாக கொண்டுவரும் போலீசாரிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில், கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் 1,554 போலீசாரிடம் நேரடியாக அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று அவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதேபோல் மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் பிறந்த நாள் அன்று அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தனது அலுவலகத்திற்கு நேரடியாக சம்பந்தப்பட்ட காவலர் மற்றும் குடும்பத்தினரை நேரில் அழைத்து, கமிஷனர் குறைகளை கேட்டு கலந்துரையாடி வருகிறார். இது, பிறந்த நாள் கொண்டாடும் காவலர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாநகர காவல் துறையில் எந்த கமிஷனரும் தனது கீழ் கடைநிலையில் பணியாற்றும் காவலர்களை நேரடியாக அலுவலகத்திற்கு அழைத்து பேசியது கிடையாது.

ஆனால் சங்கர் ஜிவால் கமிஷனராக பதவியேற்ற பிறகு கடைநிலை காவலர்களை பிறந்த நாள் அன்று நேரடியாக அழைத்து பிறந்த நாள் வாழ்த்து மடலில் தனது கைப்பட எழுதி சம்பந்தப்பட்ட காவலரிடம் கொடுத்து அவர்களுடன் தனியாகவும், குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இது பல்வேறு காவலர்கள் மத்தியிலும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கமிஷனரை நேரில் சந்தித்து கொடுக்கப்படும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பிறந்த நாள் கொண்டாடும் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: