லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் : குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு நாளை முறையீடு!!

டெல்லி : லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழு நாளை சந்திக்கிறது. விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மேலும் சம்பவத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.எனவே அவரை கைது செய்து உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்த லக்கிம்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.  

Related Stories: