உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் மயக்கம்: தாம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு

ஆலந்தூர்: தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் இருந்த  பெண் இன்ஸ்பெக்டர் வெயில் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புனிததோமையார் மலை ஒன்றியத்தின் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது. இதில், முதல் சுற்றின்போது பொழிச்சலூர் கவுல்பஜார், திரிசூலம் ஊராட்சிகளின் வாக்குகள் பிரிக்கும்பணி நடந்தது.

திரிசூலம் ஊராட்சி வாக்குகளை பிரிக்கும்போது, திரிசூலம் வாக்குச்சாவடி முகவர்கள் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கம்பி தடுப்புகளில் நிற்கவைத்துள்ளனர். இதனால் கோபமடைந்த முகவர்கள், நாங்கள் என்ன ஆடு, மாடுகளா? என கூச்சலிட்டனர்.  பின்னர்,  பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்புநிலவியது.

இதனிடையே, அதே மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  பெண் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகி வெயில் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இவரது பணியில் மாற்று போலீசார் அமர்த்தப்பட்டார். இந்த சம்பவத்தாலும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: