திருப்பத்தூர் 25வது வார்டு பகுதியில் வீடுகளில் வெட்டப்படும் மாட்டு இறைச்சியின் ரத்த கழிவுகள் குடியிருப்பு பகுதியில் தேங்கும் அவலம்-நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள 25வது வார்டு பகுதிகளில் வீடுகளிலேயே இறைச்சிக்காக பசு மாடு  வெட்டப்படுவதால் குடியிருப்பு அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாட்டு இறைச்சி கழிவுகளை தங்கள் வீடுகள் முன்பு தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பத்தூர் 25வது வார்டு சின்னமதர் பகுதியில் உள்ளது. இந்த பகுதி அருகே சந்தமியான் தெரு சின்னக்கடை தெரு, தாலுகா காவல் நிலையம், சிகேசி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது.

இந்த பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்ன மதர் தெருவில் 20க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளது. இந்த மாட்டு இறைச்சி கடைகள் அவர்கள் வீடுகளிலேயே மாடுகளை அறுத்து அதன் கழிவுகள் மற்றும் ரத்த கழிவுகளை அருகே உள்ள கால்வாயில் விட்டுவிடுகின்றனர்.

அருகே உள்ள சந்தமியான் தெரு, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வீடுகள் முன்பு ரத்த கழிவுகளுடன் கூடிய கழிவுகள் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நகராட்சியின் சார்பில் மாடு அறுக்கும் தொட்டி உள்ள நிலையில் அதனை பயன்படுத்தாமல் வீடுகளில் அறுக்கின்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்யாமல் மாடுகளை வீடுகளிலேயே அறுத்து அதன் இறைச்சி கழிவுகளை கால்வாயில் கொட்டிவிடுகின்றனர்.

இதனால் அடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய்வாய்ப்பட்டு நாள்தோறும் காய்ச்சல், சளி, உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உள்ளாட்சி தேர்தல் பணி உள்ள காரணத்தினால் நாளை உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இறைச்சி கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மெத்தனமாக செயல்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: