எளிமையாக நடந்தது முதல்வரின் மகன் திருமணம்: பஞ்சாப் மக்கள் பாராட்டு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் மகன் திருமணம் மிகவும் எளிமையாக நடந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் கடந்த மாதம் தனது பதவியை  ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில், சாம் கவுர் சாஹிப் தொகுதியின் எம்எல்ஏவும், அமரீந்தரின் அமைச்சரவையில் அமைச்சராக  இருந்த சரண்ஜித் சிங், எதிர்பாராத விதமாக பஞ்சாப் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங்கின் மகனான பொறியியல் பட்டதாரி நவ்ஜித் சிங்குக்கும், எம்பிஏ பட்டதாரியான சிம்ரன் கவுர் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. பஞ்சாபி மரபுப்படி மொஹாலியில் உள்ள குருத்வாரா சச்சா சாஹிப்பில் திருமணம் நடத்தப்பட்டது.

முதல்வர் சரண்ஜித் சிங், மணமக்களின் வாகனத்தை திருமணம் நடக்கும் இடம் வரை ஓட்டிச் சென்றார். திருமணம் முடிந்த பின்னர் புதுமணத் தம்பதியினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, தரையில் அமர்ந்து முதல்வர் சரண்ஜித் சிங் விருந்து  சாப்பிட்டார். முதல்வரின் வீட்டு திருமணம் எளிய முறையில் நடந்ததை பஞ்சாப் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: