குலசேகரன்பட்டினம் தசரா திரு விழா: பக்தர்களுக்கான வேடப்பொருட்கள் விற்பனை மந்தம்

உடன்குடி: உடன்குடியில் களை கட்டி விற்பனை நடக்கும் தசரா வேடப்பொருட்கள் இந்த ஆண்டு விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா தென்மாவட்டம் மட்டுமின்றி உலகப் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 1ம்திருநாள் கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்கள் திருக்காப்பு அணிவர்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் காளி, குரங்கு, அனுமன், குறவன், குறத்தி, வக்கீல், போலீஸ்காரர், பாதிரியார் மற்றும் முருகன், சிவன், கிருஷ்ணர் என தெய்வங்களின் உருவம் என பல்வேறு வேடம் அணிந்து வீதி, வீதியாக சென்று காணிக்கை வசூலித்து கோயிலில் படைப்பர். மேலும் ஏராளமான கிராமங்களில் தசரா குழுக்கள் அமைத்து பல்வேறு வேடங்கள் பூண்டு ஊர், ஊராக சென்று சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்களை கொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி வசூல் செய்வர். 7, 8, 9 மற்றும் 10 திருவிழாவன்று குலசை சுற்று வட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியது. இழப்புகளின் காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு டல்லாக உள்ளது. தசரா திருவிழா கொடியேறியதுமே உடன்குடி, திருச்செந்தூர், குலேசகரன்பட்டினம் பகுதி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். வேடப்பொருட்கள் உள்ள கடைகளில் பக்தர்கள் தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்குவார்கள். ஊரடங்கு தடை காரணமாக தற்போது வேடப்பொருட்கள் கடைகள் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக டோப்பா முடி உள்ளிட்ட வேடப்பொருட்கள் கடைகளுக்கு அத்திப்பூத்தாற்போல் ஏதாவது ஒருவர் மட்டுமே வந்து செல்கிறார். இதனால் தசரா திருவிழா விற்பனை மந்தமாக நடைபெறுவதால் வியாபாரிகள் செய்வதறியாது திணறுகின்றனர். முதலுக்கே மோசமாகிவிடுமோ என்று புலம்புகின்றனர்.

Related Stories: