பருவமழை முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தயாநிதி மாறன் எம்பி ஆய்வு: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தண்டையார்பேட்டை:  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினர். தொடர்ந்து, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள மாநகராட்சி உருது பள்ளி, வால்டாக்ஸ் சாலையில் உள்ள யானைகவுனி பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

பின்னர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி ஆகியோர் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னை மண்ணடியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். உடனே நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். யானைகவுனி மேம்பாலம் விரைவில் சரி செய்யப்படும். அங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்க கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாநகராட்சி உதவியுடன் விரைவில் அந்த இடம் மீட்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதலமைச்சரே நேரில் சென்று மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னையில் மழைநீர் தேங்காதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பருவ மழை தொடங்க உள்ளதால், மாநகராட்சி சார்பில் சென்னையில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மயானங்களில் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  ஆய்வின்போது, மாநகராட்சி பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ், திமுக பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: