வடகிழக்கு பருவமழையின் போது தொலைதொடர்பு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

சென்னை:  தமிழக மின்சாரவாரியம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற துணை நிலையங்களில் மழைநீர் நுழைய வாய்ப்புள்ளது. எனவே இதைத்தடுக்கும் வகையில் சிமென்ட் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற துணை நிலையங்களிலும் ஆரோக்கியமாக இயங்கும் வகையில் டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் நீர்பாசன குழாய்களை, மழைநீரை வெளியேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  டிரான்ஸ்பார்மர் பெட்டிகளில் தண்ணீர் நுழைவதை தடுக்க சரியாக மூடி வைக்க வேண்டும். அசாதாரணமாக நீர் மட்டம் அதிகரிக்கும் போது பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பில்லர் பாக்ஸ்கள் மற்றும் டிரான்ஸ்பார்கள் தனிமைப்படுத்தப்பட்டால், உடனடியாக மின்னகத்திற்கு (94987 94987) தெரிவிக்கப்பட வேண்டும்.

அவசரகாலத்தில் பயன்படுத்தும் வகையில் மின்கம்பங்கள், கடத்திகள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரேன்கள், லாரிகள் மற்றும் ஜெசிபிகள் ஆகியவை பேரிடர் காலத்தில் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட வாகனங்களில் உரிமையாளர்களின் தொடர்பு எண்கள் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் உடனடியாக கிடைக்க வேண்டும். மேலும் மரம் வெட்டுபவர்கள், கயிறுகள் போன்றவையும் தயாராக இருக்க வேண்டும்.  தொலைதொடர்பு அலுவலகங்கள், மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள், கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள், குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவ்வப்போது மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். கண்காணிப்பு பொறியாளர்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை தொடர்பு கொண்டு மின்வாரியம் செய்யும் மாறுதல்ளின் நிலைபாட்டை தெரிவிக்கலாம். இயற்கை பேரிடர் காரணமாக மின்வாரியத்தின் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோர புகைப்படங்களுடன் (சீரமைக்கப்பட்டதற்கு முன்னும், பின்னும்) முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசங்கள், சானிடைசர்களை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: