கோயில் நிலம், கட்டிடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்க குழு: முதல்வர் விரைவில் அறிவிக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் இணையவழியில் வாடகை தொகையினை செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கோயில்  கட்டிடங்கள், நிலங்களின் வாடகைதாரர்கள் மாதம்தோறும் வாடகை கட்டுவதற்கு   1ம் தேதி முதல் 5ம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  தற்போது 1ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் வாடகை செலுத்த கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி மூலமாக அவரவருக்கு உண்டான வாடகை தொகையை  இருக்கின்ற இடத்திலேயே இருந்து வாடகை கட்டுவதற்கு வசதி தொடங்கப்பட்டுள்ளது.  

இணையவழியில்  செலுத்த முடியாதவர்கள் நேரடியாக கோயிலுக்கு சென்று வாடகை செலுத்தலாம். ஒரு சிலர் வாடகை அதிகம் என்று செலுத்தாமல் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். ஒரு சிலர் வாடகையை தொடர்ந்து  செலுத்துகின்றனர். ஒரு சிலர் பழைய வாடகையையே செலுத்தி வருகின்றனர்.இதற்கெல்லாம் ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில்,  நியாய வாடகை நிர்ணய குழு வெகுவிரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க  இருக்கிறார். தற்போது 3 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு உள்ள சொத்துக்களில் இருந்து வாடகை பெறப்படுகிறது. மேலும், கண்டறியப்படும் சொத்துக்களுக்கு  வாடகை பெறப்படும். எத்தனை தடை  வந்தாலும் இந்த அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது.

இவர்களை போல் 100 பாஜ வந்தாலும் அதை செய்யமுடியாது. ஒன்றிய அரசு கூறியபடி தான்  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளது. அவர்கள்  போராடுவது என்றால் ஒன்றிய அரசுக்கு எதிராக தான் போராட வேண்டும். இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் நீதிமன்ற  அறிவுறுத்தலின் படி  குயின்ஸ்ேலண்ட் ஆக்கிரமித்துள்ள இடத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீட்போம். குயின்ஸ்லேண்ட்  ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டால் நான் இந்து சமய அறநிலையத்துறை பற்றி  பேசமாட்டேன் என்று எச்.ராஜா கூறினார். அவர் இனிமேல் பேசாமல் இருப்பாரா என்று பார்க்க வேண்டும்.  மன்னர் காலத்து நகைகளை உருக்கும் எண்ணம்  இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: