திருத்தணி முருகன் கோயிலில் மொட்டை அடிக்க பணம் வசூலித்தவர் சஸ்பெண்ட்: மற்றொருவருக்கு உரிமம் ரத்து

திருத்தணி,  அக். 8:  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அதிரடி நடவடிக்கைகள் செய்து வருகிறார்.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒன்று காலை முதல் இரவு வரை அன்னதான திட்டத்தையும் திருக்கோயில்களில் இலவச மொட்டை அடிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த திட்டத்தை திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி வைத்தார்.  மேலும்,  இப்பணியில் ஈடுபடும் முடி இறக்கும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று சென்னையை சேர்ந்த பக்தர் பிரவீன் என்பவர் திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நாகவேடு சத்திரத்திற்கு மொட்டை அடிப்பதற்காக வந்துள்ளார்.  அப்போது, அங்கு டோக்கனை பெற்றுள்ளார். அதற்கு திருக்கோயில் பணியாளர் அவரிடம் ரூ.10  பெற்றுள்ளார்.  தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழிலாளி பிரவீனிடம் ரூ.50 பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து பிரவீன் திருக்கோயில் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளார்.  இதனை  அடுத்து,  இணை ஆணையர் பரஞ்சோதி பக்தர் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.  இதில், டோக்கன் வழங்குவதற்காக கோயில் பணியாளர் பூலட்சுமி  (55)  ரூ.10 பெற்றது தெரிய வந்தது.

இதேபோல் மொட்டை அடிப்பதற்கு மகேஸ்வரி ரூ.50 பெற்றது விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து கோயில் பணியாளர் பூலஷ்மியை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் மகேஸ்வரியின் மொட்டை அடிக்கும் உரிமத்தை ரத்து செய்தும் இணை ஆணையர் பரஞ்சோதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: