ஓட்டுக்கு பணம் வழங்கியதை தட்டிக்கேட்ட திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: அதிமுக பிரமுகருக்கு வலை

வேளச்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட  பெரும்பாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக திமுக, அதிமுக, உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகாசினி ரங்கராஜனுக்காக கடந்த 4ம் தேதி பெரும்பாக்கம் எழில் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, திமுக ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் ஆஷாகுமார் மற்றும் திமுகவினர் அங்கு சென்று, இதை தட்டிகேட்டு தடுத்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த அதிமுக வேட்பாளரின் கணவர் ரங்கராஜன், அண்ணன் மற்றும் அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஆஷாகுமாரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து, ஆஷாகுமார் அளித்த புகாரின் பேரில், பெரும்பாக்கம் போலீசார், ராஜசேகர், அதிமுக வேட்பாளரின் கணவர் ரங்கராஜன் மற்றும் அதிமுகவினர் சிலர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று அதிமுக பிரமுகர் ராஜசேகரை கைது செய்ய, பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.

இதை அறிந்த அதிமுகவினர், கட்சி கொடிகளுடன் அவர் வீட்டு முன் திரண்டு, போலீசாரை வீட்டில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதைப் பயன்படுத்தி, ராஜசேகர் தப்பிச் சென்றார். இதையடுத்து, அதிமுகவினர் ராஜசேகரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து நூக்கம்பாளையம் சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மடிப்பாக்கம் உதவி கமிஷனர் ரூபன் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: