வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர் பெயர் சேர்ப்பு புகார் தகுதியானவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்களும் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஈச்சாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கான துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து தனது பெயரும், பல தகுதியான வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஈச்சாங்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.  நீக்கப்பட்ட தகுதியான  வாக்காளர்களுக்கு வாக்குரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈச்சாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், தேர்தல் வாக்குப்பதிவு துவங்கி விட்டதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது.  ஆவணங்களை சரிபார்த்து  தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: