3,000 கிராமங்களில் 1,71,300 லட்சம் பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டை!: ம.பி.யில் ஸ்வமித்வா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: நாட்டின் கிராமங்கள், கிராம சொத்துக்கள் நிலம் மற்றும் வீட்டின் பதிவுகளை நிச்சயமற்ற தன்மையில் இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்வமித்வா திட்டம் மூலம் கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும், இதர நிதி பயன்களுக்கும் நிலம் எனும் சொத்தை பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு மறுவரையறை செய்வதையும் இது நோக்கமாக கொண்டது.

நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இந்த திட்டம் ஊக்கப்படுத்துகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 71 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். பின்னர் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கிராமங்கள், கிராம சொத்துக்கள், நிலம் மற்றும் வீட்டின் பதிவுகளை நிச்சயமற்ற தன்மையில் இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும் ஸ்வமித்வா திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இ-சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆரம்பகட்டத்தில் உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்திராகண்ட், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் சில கிராமங்களில் தொடங்கப்பட்டதாகவும், இந்த மாநிலங்களில் 22 லட்சம் குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related Stories: