குடிநீர், கழிப்பறை வசதி தொடர்பாக திரையரங்குகளில் ஆய்வு செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெரம்பூரில் உள்ள எஸ் டூ ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில்,  தண்ணீர் பாட்டில்கள்,  குளிர்பானங்கள், உணவு பொருட்கள் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பதன் மூலம் திரையரங்குகள் பெரும் லாபம் சம்பாதிக்கின்றன. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்யப்படுகிறது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த  2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால், அதன் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: