வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில், வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார் செய்ய விளம்பரம் செய்துள்ளோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். வள்ளலாரின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தங்கசாலையில், அவர் வாழ்ந்த வீட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வள்ளலார் சபை நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளில், அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வருமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நான் இங்கு வந்துள்ளேன். இதுவரை எந்த அறநிலையத் துறை அமைச்சரும் வள்ளலார் வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்ததில்லை. அவர் வாழ்ந்த வீட்டை அமைச்சர் பார்வையிடுவது இதுதான் முதல்முறை. இந்த இல்லத்தை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. வள்ளலார் சபைக்கு எந்த உதவியாக இருந்தாலும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார் செய்ய விளம்பரம் செய்துள்ளோம். அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. கொரோனா யாருக்கும் பரவவில்லை என்றால் அனைத்து கோயில்களும் திறக்கப்படும். தெய்வங்களுக்கு பூஜை தொடர்ந்து நடைபெறும்.

Related Stories: