மசினகுடியில் 2 கும்கிகளுடன் 9வது நாளாக தேடுதல் வேட்டை ஆட்கொல்லி புலி சுட்டு கொல்லப்படமாட்டாது: வனத்துறை அறிவிப்பு

கூடலூர்: கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்து கொன்ற டி23 புலியை சுட்டு கொல்ல அதிரடிப்படையினரும் ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் களத்தில் இறங்கினர். ஆனால் அந்த புலி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 9வது நாளாக நேற்றும் புலியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. வனத்துறையினர், கால்நடை மருத்துவர், வேட்டை தடுப்பு காவலர்கள், மோப்பநாய் என 10 குழுக்கள் வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேற்று மசினகுடிக்கு வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் வனத்துறையினர் கூறுகையில், புலியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து  பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக்கொல்லப்படமாட்டாது. உயிருடன் பிடிப்பதுதான் எங்கள் நோக்கம் என்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முதுமலையில் உள்ள அதவை என்ற மோப்பநாய் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 2 மோப்ப நாய்கள் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அடர்ந்த புதருக்குள் சென்று தேடுதல் நடத்த 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை நடத்தப்பட்ட தேடுதல் பணியில் மசினகுடி வனப்பகுதியில் புலி தென்படாததால் கடந்த ஒரு வருடத்தில் இந்த புலியின் நடமாட்டம் தென்பட்ட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: