அதிமுக தோல்விக்கு காரணம் வியூகங்கள் சரியில்லாததுதான்: விழுப்புரம் கூட்டத்தில் ஓபிஎஸ் திடீர் பாய்ச்சல்

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் வியூகங்கள் சரியில்லாததுதான் என்று விழுப்புரம் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசினார். விழுப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம், மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர், தமிழகத்தில் நல்லாட்சியை செய்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று, மாநிலத்தில் தனது சொந்த நிதியில் 52 சதவீதத்தை மக்களின் சமூக பாதுகாப்பிற்கான திட்டங்களை செயல்படுத்தினார்.

அவருக்குப்பின் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வகுத்த திட்டங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கும்படி ஆட்சியை நடத்தினார். எந்த குறையும், குற்றமும் சொல்ல முடியாத ஆட்சியை நாங்கள் நிறைவு செய்தோம். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான வியூகங்கள் வகுக்காததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஒன்றரை சதவீத வாக்கு வித்தியாசத்தில் நாம் கோட்டையை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வருகின்ற காலங்களில் தவறுகளை சரிசெய்து வலிமையை நிரூபிக்க காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு ஜனநாயக கடமையை செய்து வருகிறோம். 1972ல் துவக்கப்பட்ட இந்த இயக்கம், 49வது ஆண்டை கடக்கப்போகிறது. அக்டோபர் 11ம்தேதி 50 வது ஆண்டு பொன்விழா காணவிருக்கிறது அதிமுக. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வியூகங்கள் சரியில்லை. தற்போது யாரையும் குறைசொல்லவில்லை. எங்கே தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து ஒற்றுமையுடன் இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றார்.

Related Stories: