திருச்செந்தூர்- பாளை சாலை பணிகள் விறுவிறுப்பு: ரூ.435 கோடியில் அகலப்படுத்தப்படுகிறது.! பாலம் கட்டும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை மும்முரம்

நெல்லை:  சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை இடையே ரூ.435 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2ம் கட்ட பணிகள் கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையே மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் முக்கிய சாலைகளை விஸ்தரித்து தொழில் வளர்ச்சியை எட்டிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை பிரதான தொழிலான விவசாய வளர்ச்சிக்கும், காய்கறிகள் வரத்துக்கும் சாலைகள் விரிவாக்கம் அவசியமானது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தொடங்கி, பாளை சீனிவாசநகர் வரை 50.590 கிமீ சாலை ரூ.435 கோடியில் விஸ்தரிக்கப்பட உள்ளது.

2ம் கட்டமாக கோபாலசமுத்திரம் தொடங்கி- கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 7 மீட்டர் அகலம் கொண்ட பாளை- திருச்செந்தூர் சாலையை நகர்ப்புற பகுதியில் 16 மீட்டராகவும், கிராமப்புற பகுதிகளில் 23 மீட்டராகவும் மாற்றி வருகின்றனர். இதற்கான பணிகள் பாளை வி.எம்.சத்திரம், ஆரோக்கியநாதபுரம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சாலையின் இருபுறமும் விஸ்தரிக்கப்பட்டு வருவதோடு, பணிகள் நடக்கும் இடங்களில் மூடைகளை அடுக்கி, வாகனங்களில் வருவோர் பள்ளங்களில் விழுந்துவிடாதபடி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் இழப்பீட்டு தொகை வழங்கி நிலஎடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாளை- திருச்செந்தூர் சாலையில் ஆழ்வார்திருநகரியை தாண்டியபிறகு பல்வேறு வளைவுகளோடு காணப்படுகிறது. அதனை நேர் செய்யும் பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது. சாலை விஸ்தரிக்கப்படும்போது தேவையான இடங்களில் வடிகால் வசதிகளும் செய்யப்பட உள்ளது. மேலும் சாலை விஸ்தரிப்புக்காக ஒரு மரம் அகற்றப்படும்போது, அதற்காக 10 மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறை அதை 7 வருடங்கள் பராமரிக்க உள்ளது. தொழில்வழித்தட திட்டத்தின் கீழ் இவ்விருசாலைகளும் விஸ்தரிக்கப்படும்போது, திருச்செந்தூர், வள்ளியூர், நாகர்கோவில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளா செல்ல எளிதாக வழிபிறக்கும். நெல்லை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் ஜெட் வேகத்தில் வாகனங்கள் செல்லும் நிலையில், பாளை- திருச்செந்தூர் சாலையிலும் எதிர்காலத்தில் வாகனங்கள் வேகமாக செல்ல வழி கிடைக்கும்.

Related Stories: