பாமக நிறுவனர் ராமதாஸ் ஐகோர்ட்டில் பதில் மனு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினர்களுக்கு பாதிப்பு இல்லை

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை.  முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம் இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

Related Stories: