பரிதாப நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ்: ஹரிஷ் ராவத் கருத்துக்கு முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் பதிலடி..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது என்று அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். விசுவாசமாக சேவை செய்த கட்சியில் இனிமேல் மரியாதையை எதிர்பார்க்கப் போவதில்லை என அமரிந்தர் சிங் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்..

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கை, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் விமர்சித்து இருந்தார். அமித்ஷாவை அமரிந்தர் சிங் சந்தித்ததை அடுத்து, அமரிந்தர் சிங்கின் மதசார்பற்ற தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து, ஹரிஷ்ராவத்தின் இந்த விமர்சனம் முட்டாள்தனமானது என அமரிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் இருப்பதன் விளைவே ராவத்தின் இத்தகைய கருத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா். இத்தனை ஆண்டுகளாக நான் விசுவாசமாக சேவை செய்த கட்சியில் இனிமேல் மரியாதையை எதிர்பார்க்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கேப்டன் அமரிந்தர் சிங்கின் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சில விவசாய சங்கத் தலைவர்களையும் தனது கட்சியில் அவர் சேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: