மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழையால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் கிடுகிடு உயர்வு

சின்னாளபட்டி: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழையால், திண்டுக்கல்லின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மூன்று, நான்கு நாட்கள் மழை பெய்தால் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு பகுதியில் மழை பெய்தால் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து இருக்கும். இதன் மொத்த உயரம் 23.5 அடி. திண்டுக்கல் மாநகரம் மட்டுமல்லாமல் சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தின் நீர்மட்டம் கோடை வெயிலின் காரணமாக கிடுகிடுவென குறைந்து வந்தது. தற்போது தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 17 அடியாக இருந்தது. காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளதால் தண்ணீர் வரத்து பாதையில் குளோரின் பவுடர் போட்டு சுத்தம் செய்து வருகிறோம். இதன் மூலம் விஷசந்துக்கள் மற்றும் பூச்சிகள் அணையின் தண்ணீர் பகுதிக்கு வராது. தற்போது போல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால், 4 நாட்களில் அணை நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: