சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியல் சுமார் 3 கிமீ உயரம் வரை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பிற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும்.