வேட்பாளர்களை உங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து வாக்களியுங்கள்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது. பொழிச்சலூர் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. தற்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் கழிவுநீர் கலப்பதும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அவலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. கூவத்தை தேம்ஸ் நதியாக மாற்றுவோம் என்று கூறிய கதையெல்லாம், நான் சின்ன பையனாக இருந்தபோது கேட்ட நியாபகம்.

நான் ஒரு ஊரில் உள்ள குறைகளை கூறினால், அதே குறைகள் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ளது. பொழிச்சலூரில் தற்போது வரை உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி இல்லை. மாணவர்கள் எங்கு சென்று கல்வி கற்பார்கள். நியாயப்படுத்துகிறேன். இங்கு எம்ஜிஆர் தெரு, மயான தெரு, சுபம் அரங்கன் பகுதிகளில் சாலை வசதிகள் இல்லை. கழிவுநீர் வசதிகள் இல்லை. மழைக்காலங்களில் சாக்கடை வீடு தேடி வருகிறது. கடந்த தேர்தலில் அனைத்து வசதிகளும் வீடு தேடி வரும் என கூறியவர்கள், சாக்கடை தான் வீடு தேடி வரும் என்று கூறினார்கள் என்று நினைக்கிறேன்.

எல்லோருக்கும் அந்த பொறுப்பும், கோபமும் சுயமரியாதையும் இன்னும் வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்கான ஒரு வாய்ப்பாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அதில் செலவு கணக்கு விபரங்களை அனைவரும் கேட்க வேண்டும். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் எங்கள் கட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்கலாம். எனது கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களை உங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து அவர்களுக்கு வாக்களித்து, உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். நம் அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

Related Stories: