நவீன மருத்துவ வகுப்பறை கட்டிடம் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

மால்லபுரம்: மால்லபுரத்தில் மருத்துவ முன்னோடிகளின் சிலை, நவீன வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி உள்ளது. இங்கு, உலக மருத்துவ முன்னோடிகள் சிலைகள், நவீன வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி நிறுவனர் டேவிட் கே.பிள்ளை தலைமை தாங்கினார். மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, உலக மருத்துவ முன்னோடி சிலைகள், நவீன மருத்துவ வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்நிறுவனம் மகாராஸ்டிரா மாநிலம்  புனேயில் 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கியுள்ளோம். இதுவரை  சுமார் 4,800 மாணவர்கள் மருத்துவராகி அரசு மற்றும் முன்னணி தனியார்  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். பிளஸ் 2 முடித்த  மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு பயிற்சியும், அதன்பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கவும், இந்தியா திரும்பியவுடன்,  இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் வெளிநாட்டு பட்டயப்படிப்பு தேர்வுக்கு  தயாராகி மருத்துவ லைசன்ஸ் பெற்றுதருவது வரை மாணவர்களுக்கு, இந்நிறுவனம்  துணை நிற்கிறது.

போதிதர்மர், ஹிப்போகிரட்ஸ், சுஸ்ருதர், அக்னோடைஸ் ஆகிய உலக  முன்னோடிகளின் சிலைகள் மருத்துவ மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்லூரி  வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் 4ம், 5ம் நூற்றாண்டுகளில்  வாழ்ந்தவர்கள். அவர்களது வாழ்க்கை  குறிப்பு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும். தகுதியுள்ள நல்ல மதிப்பெண் பெற்று படிக்க  வசதியில்லாத மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களது மருத்துவ கனவை  நிறைவேற்றி ஒவ்வொரு கிராமங்கள்தோறும் ஒரு டாக்டரை உருவாக்க உள்ளோம்.

அதன் துவக்கமாக மருத்துவ கனவால் உயிர்நீத்த அனிதாவின் தங்கை  சௌந்தர்யாவை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க கடந்த  ஆண்டு ஏற்பாடு செய்து, அதற்கான முழு செலவையும் தனியார் அகாடாமி ஏற்று கொண்டது என்றனர். நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம், விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: