பவானிசாகர் அணையில் முகாமிட்ட காட்டுயானைகள்: பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள அணையின் கரையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணையின் கரை பகுதியில் உள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன.பகல் நேரங்களில் அணையின் நீர்தேக்க பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நீரேற்று நிலையம் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி நீரேற்று நிலையம் பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டபடி சுற்றித்திரிந்தன. இதனால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் யானைகளை கண்டு அச்சமடைந்து நீரேற்று நிலையத்தில்  பதுங்கிக் கொண்டனர்.

வனப்பகுதியில் இருந்து வெளியேறி பவானிசாகர் அணையின் கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் கீழ்பவானி வாய்க்காலை கடந்து சென்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கேட் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருகிறது.இதனால், பவானிசாகர் பகுதியில் பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நடமாடுவதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: