பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டால் சிறைக்கு செல்ல வேண்டும்: உற்பத்தியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்,’என உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து ஆய்வு செய்து 6 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, காலை 4 மணி நேரமும், மாலை 4 மணி நேரமும் வெடிப்பதற்கு அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், ‘சுற்றுச்சூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிப்பது ஏன்?’என உற்பத்தியாளர்களுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான நட்கர்னி, “சிபிஐ.யின் விசாரணையில் என்ன கண்டுபிடித்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அதனால், அந்த விசாரணை அறிக்கையை எங்களுக்கு கொடுத்தால் மட்டுமே, வாதங்களை முன்வைக்க முடியும்.’ என தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா, அறிக்கையின் நகலை பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ’ என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: சிபிஐ வழங்கியுள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மிக கடுமையாக மீறி, பேரியம், நைட்ரேட் ஆகிய நச்சு ரசாயனங்களை கலந்து பட்டாசு தயாரித்து இருப்பது தெளிவாகிறது. முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே கடுமையான விதிமுறை மீறல்களை செய்துள்ளன.

இவற்றின் உரிமத்தை ரத்து செய்து விட்டு, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது? இதில், குற்றச்சாட்டு உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குதான் செல்ல வேண்டும். இது குறித்து உற்பத்தியாளர்கள் விளக்கம் தெரிவிக்க வேண்டும். பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் மீறல் குறித்து, அனைத்து நிறுவனத்திடமும் விரிவாக ஆய்வு செய்து அடுத்த 6 வாரத்தில் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய கூறி அக்.6க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: