திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக ஏ.ஜெ.சேகர் நியமனம்

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் திருப்பதி திருமலையில் வெங்கடாச்சலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. தேவஸ்தான தலைவராக சுப்பா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் 2 ஆண்டுகளுக்கு பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தின் சார்பில் திமுக எம்எல்ஏவும் வேலூர் மாவட்டச் செயலாளருமான நந்தக்குமார், எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் கன்னையா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக, தமிழக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். புதிய நியமிக்கப்பட்டுள்ள சேகரின் கீழ், சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள கோயில், கன்னியாகுமரி, உளுந்தூர் பேட்டை, வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்கள், நெல்லையில் உள்ள வாடிக்கையாளர் மையம் ஆகியவை இயங்கும்.

மேலும், திருமலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக குழுவிலும், தமிழக தலைவர் என்ற முறையில் ஏ.ஜெ.சேகர் இடம்பெறுவார். அதேபோல, மகாராஷ்டிரா மாநில தலைவராக அமுல் காலே, கர்நாடகா மாநில தலைவராக ரமேஷ் ஷெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த முறை திருமலை திருப்பதி கோயில் தமிழக நிர்வாகிகளாக 33 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தமிழக நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.

Related Stories: