தா.பேட்டை அருகே பள்ளி செல்லும் சாலையோரம் பாதாள கிணறு: பேராபத்து ஏற்படும் முன் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

தா.பேட்டை:பள்ளி செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள பாதாள கிணறுக்கு தடுப்பு சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தா.பேட்டையில் இருந்து துறையூர் செல்லும் வழியில் மாணிக்கபுரம் செல்வதற்கு கிளைசாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் இரண்டு பெரிய பாதாள கிணறு அமைந்துள்ளது. அதனை ஒட்டி தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து தா.பேட்டை சேர்ந்த சுமதி என்பவர் கூறுகையில், தா.பேட்டையிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் மாணிக்கபுரம் கிளை சாலை அமைந்துள்ளது. இதன் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. மேலும் பகல், இரவு நேரங்களில் இந்த கிளைச் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.

தனியார் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் பேருந்தும் இவ்வழியாகத்தான் சென்று வருகிறது. இந்த சாலையை ஒட்டி புதர்மண்டிய நிலையில் பாதாள கிணறு இரண்டு உள்ளது. தடுப்புச்சுவர் ஏதும் எதுவும் இல்லாத நிலையில் மிகவும் ஆபத்தான பயணத்தை இதன் வழியே செல்வோர் பயணிக்க நேரிடுகிறது.தவறி கிணற்றுக்குள் விழ நேரிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திருச்சி கலெக்டர் மாணிக்கபுரம் சாலையில் பாதாள கிணறு அமைந்து உள்ள சாலையை ஒட்டி தடுப்பு சுவர் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

Related Stories: