தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்: கிலோ ரூ20 முதல் 60 வரை விற்பனை

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் கொரோனா ஊரடங்கில் விற்பனை இல்லாமல் தவித்து வந்த விவசாயிகள் தற்போது கோழிக்கொண்டை பூசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தோகைமலை பகுதிகளில் கடந்தசில வருடங்களாக மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, இட்லி பூ என்ற விச்சிப்பூ போன்ற பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதே போன்று கோழிக்கொண்டை பூ சாகுபடியிலும் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கோழிக்கொண்டை நடவு செய்த 2 மாதங்களுக்கு பிறகு பூக்க தொடங்குவதாகவும், அதன் பின்னர் 3 முதல் 4 மாதங்கள் வரை தினமும் பூக்களை பறிக்கலாம் என்றும் விவசாயிகள் தொிவிக்கின்றனர். 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும், கோழிக்கொண்டை பூச்செடிகளுக்கு எந்த மருந்துகளும் தெளிக்க வேண்டியதில்லை என்றும் சாகுபடிக்கான செலவினங்கள் மிக குறைவு என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

தினமும் பறிக்கபடும் கோழிக்கொண்டை பூக்கள் திருச்சி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கூறுகின்றனர். அங்கு சீசன் இல்லாத போது ஒரு கிலோ கோழிக்கொண்டை பூக்கள் ரூ.20க்கும் சீசன் உள்ளபோதுரூ. 60 வரை விற்பனை நடைபெறுவதாகவும் தொிவிக்கின்றனர். இதனால் அன்றாட செலவிற்கு பணம் கிடைப்பதாலும், சாகுபடிக்கு அதிக செலவு இல்லை என்பதாலும் தற்போது கோழிக்கொண்டை பூசாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கின் போது கோழிக்கொண்டை பூவை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வந்தனர். இதனால் பல மாதங்களாக கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வாழ்வாரத்தை இழந்து வந்தனர். இதனால் சாகுபடி செய்த கோழிக்கொண்டை பூக்களை விவசாயிகள் வயலிலேயே அழித்துவிட்டனர். தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

Related Stories: