விளம்பரத்துக்காக துவங்கிய அம்மா கிளினிக் செயல்படவில்லை.! மருத்துவ படிப்புகளுக்கு 850 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக கூட்டரங்கில், தனியார் மருத்துவ கல்லூரிகள் இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மற்றும் அதிகாரிகள் பங்கேற்றன்ர்.  கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒன்றிய அரசின் சார்பில் ஆய்வுக் குழுவும் வந்து 11 மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்தனர். அதில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்னும் கூடுதலான கட்டிடங்களைக் கட்டுவதற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

4 மாவட்டங்களுக்கு மட்டும் மறு ஆய்வு நடக்கும். விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களின் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு தலா 150 வீதம் 3 மருத்துவக் கல்லூரிக்கும் 450 இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதேப்போல் நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்ளில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்கள் வீதம் 400 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். ஆக மொத்தம் 850 இடங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்.2ம்தேதி அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 12,500 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த வாரம், மெகா தடுப்பூசி முகாம்கள் இல்லை. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அக்.10 அன்று ஒரு பெரிய அளவிலான மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் கூடுதலானத் தடுப்பூசிகள் செலுத்துகிற வகையில் நடத்தப்படும். தற்போது நிதிநிலை அறிவிப்பில் 4,800 செவிலியர்களை நியமிப்பதற்கு அறிவித்து உள்ளோம். வருமுன் காப்போம் திட்டம் அந்தந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் இருக்கிற மருத்துவர்கள் மூலம் நடைபெற உள்ளது. அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் கூட, அம்மா மினி கிளினிக்குத்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். நான் சட்டமன்றத்தில் கூட அம்மா மினி கிளினிக்குகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன். விளம்பரத்திற்காக ஆரம்பிக்கப்பட்டவைகள் தான் அவை. ஆனால் அவை ஆரம்பித்ததோடு சரி. இப்போதும் எங்கும் அவைகள் இயங்கவில்லை. போர்டு மட்டும் தான் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>