சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லை மறுவரையறை செய்யும் பணி தீவிரம் புதிதாக 50 சார்பதிவாளர் அலுவலகங்கள், 5 பதிவு மாவட்டங்கள் உருவாகிறது: பதிவுத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்த பிறகு புதிதாக 50 சார்பதிவாளர் அலுவலகங்கள், 5 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலக எல்லைகள் பெரும்பாலும் வருவாய் மாவட்டங்கள், வருவாய் வட்டம், வருவாய் கிராமங்களை கணக்கில் கொண்டு தான் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பட்டா மாறுதல் போன்ற எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நிவர்த்தி செய்ய முடியும்.

ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் வருவாய் கிராமங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனக்கூறப்படுகிறது. தாலுகா, வருவாய் கிராம அலுவலக எல்லை ஒன்றாகவும், சார்பதிவாளர் அலுவலகங்கள் வேறொரு எல்லையாகவும் உள்ளது. அதே போன்று, ஒரு கிராமத்தின் அருகே சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கும் போது பல கி.மீ தொலைவில் இன்னொரு சார்பதிவாளர் அலுவலக எல்ல அந்த கிராமங்கள் அமைந்திருக்கிறது. இது போன்ற பிரச்னையால் பதிவுக்காக பொதுமக்கள் பல கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் வருவாய் வட்டம், வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சார்பதிவாளர் அலுவலக எல்லையை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் பதிவு எல்லைகள் சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலக எல்ைலயை மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது.

முதற்கட்டமாக, வருவாய் கிராம எல்லையில் உள்ள குக்கிராமங்கள் சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வருவது தொடர்பாக கோரிக்கையை பொதுமக்களிடம் இருந்து பெற மாவட்டப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் எல்லைக மறுவரையறை செய்யப்படுகிறது. இப்பணி முடிந்தவுடன் புதிதாக 50 சார்பதிவாளர் அலுவகங்கள் உருவாக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து வருவாய் மாவட்டங்களுக்கு இணையாக பதிவு மாவட்டம் அமைக்கப்பட வேண்டும். அதன்படி திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களுக்கு தற்போது வரை பதிவு மாவட்டம் அமைக்கப்படவில்லை. எனவே, புதிதாக அங்கு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். அதன்பேரில், வருவாய் மாவட்ட எல்லையை அடிப்படையாக கொண்டு பதிவு மாவட்ட எல்லை வரையறுக்கப்பட்டு வருகிறது.எனவே, புதிதாக 5 மாவட்டங்கள் விரைவில் உருவாக்கப்படவுள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: