தரமற்ற புளியந்தோப்பு கட்டிட விவகாரம் முதல்வரிடம் நாளை அறிக்கை தாக்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளின் கட்டுமான பணி தரமற்று இருப்பதாகவும், சிமென்ட் பூச்சுகள் தொட்டாலே உதிர்வதாகவும் குடியிருப்பில் வசித்த மக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஐ.ஐ.டி அதிகாரிகள் குழுவினர் 11 பேர்ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், ஐ.ஐ.டி அதிகாரிகளின் ஆய்வறிக்கை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கட்டுமானத்தின் தரம் குறித்து ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்துள்ளனர். நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், முழுமையான அறிக்கை நாளை மறுநாள் (நாளை) முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் மக்கள் குடியிருக்கும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 54,000 இடங்களில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் செயலாக்க குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து பட்டாக்கள் வழங்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 6,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக தொழில் துறை சார்பில் சேலத்தில் ரூ.85 கோடியில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஜவ்வரிசி கிடங்கை முதல்வர் நாளை மறுநாள் திறந்து வைக்க உள்ளார்.

Related Stories: