சிறுநீரகங்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்!!

சென்னை :சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் சிறுமி ஜனனியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் சிறுமிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மனைவி ராஜநந்தினி (40). இவர்களது மகள் ஜனனி (14). இவர் அழகாபுரம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற போட்டிகளில் ஜனனி மாநில அளவில் பரிசு பெற்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சிறுமி, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து போனது தெரியவந்தது.

இதையடுத்து ராஜநந்தினி சிறுமிக்கு தனது ஒரு கிட்னியை கொடுத்தார். ஆனால் அந்த கிட்னியும் 15 நாட்களுக்கு பிறகு செயலிழந்து போனது. இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்த தாய், இதுகுறித்து தலைமை செயலகத்தில் உதவி செய்யுமாறு மனு கொடுத்தார். அதன்படி அவர்களை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடர்பு கொண்டு சிறுமியை சென்னைக்கு அழைத்து வருமாறு கூறினார்.சென்னைக்கு வந்த ஜனனிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியை நேரில் சந்திக்குமாறு கூறியிருந்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேராக சென்று ஜனனியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்ததுடன் தரமான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சிறுமி ஜனனி உருக்கமான வீடியோ

முன்னதாக  சிறுமி ஜனனி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “வணக்கம் சிஎம் சார். நாங்கள் சேலத்தில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு இரண்டு கிட்னியும் செய லிழந்து போனது. எனது அம்மா எனக்கு கிட்னி கொடுத்தார்கள். ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மிகவும் பயமாக இருக்கிறது. படிக்க கூட முடியவில்லை. 2 ஆண்டாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன்.

வலி தாங்க முடியவில்லை. பிளீஸ் சிஎம் (இரண்டு கரங்களையும் கும்பிட்டபடி) என்னை எப்படியாவது காப்பாத்த முடியுமா? ஹெல்ப் பன்னுங்க பிளீஸ்\” என அந்த சிறுமி உருக்கமாக பேசி இருந்தார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது.இந்நிலையில், சிறுமியின் தாயிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்போனில் பேசி சிறுமியின் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு!!

அந்த ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஹலோ.. நான் ஸ்டாலின் பேசுறேன். குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது பற்றி சுகாதாரத்துறையிடம் பேசியுள்ளேன். தைரியமாக இருங்கள். காத்திருப்பில் உள்ளதால் வந்தவுடன் முதல் உரிமை சிறுமிக்கு கொடுக்க சொல்லி உள்ளேன். இதனால் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு சிறுமியின் தாய் ராஜநந்தினி பதில் பேசும்போது, எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். எனது குழந்தையை காப்பாற்றினால் போதும். ஏற்கனவே நான்பட்ட கஷ்டம் போதும். நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் எனது மகள் உங்களிடம் பேசுவதற்கு ஆவலாக இருக்கிறாள் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து சிறுமியிடம் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எல்லாம் சரியாகி விடும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருக்க வேண்டும். கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். விரைவில் கிடைத்து விடும். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.

Related Stories: