வாணியம்பாடியில் கலெக்டர் எச்சரிக்கையை மீறி பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு-கடும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி : வாணிம்பாடி பாலாற்றில் கலெக்டர் எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆத்துமேடு, சிஎல் சாலை ஆகிய பகுதிகளிஇருந்து  குப்பை கழிவுகளை எடுத்து வந்து பாலாற்றின் கரையில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

மேலும், கொள்ளதெரு பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் கொட்டப்படும் இடத்திலிருந்து அருகிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் தனியார் பள்ளி உள்ளது. எனவே, இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், பல தெருக்களில் சேகரிக்கும் குப்பைகளை ஓரிடத்தில் வைத்து தரம்பிரித்து கழிவுகளை நகராட்சி வாகனம் மூலமாக வளையம்பட்டிற்கு கொண்டுபோய் கொட்ட வேண்டும். ஆனால் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரித்து விட்டு அந்த குப்பைகளை அருகில் உள்ள பாலாற்றங் கரையில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியரிடம் கேட்டபோது, நாங்கள் கொட்டுவதில்லை. அருகாமையில் உள்ள கடைக்காரர்கள் தான் கொட்டுகிறார்கள் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்.

இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர் பாலாற்றங்கரையில் குப்பைகளை கொட்டுபவர்கள்  மீது ₹5 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார் எனவே, குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: