தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

புதுடெல்லி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் 4 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும். அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு கடந்த 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்க மேலும் 7 மாதங்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஒரு நாள் கூட வழங்க முடியாது எனக்கூறி, இதுதொடர்பாக மனுதாரர் இரண்டு நாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் மனுதாரர் சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்க மனுதாரரான எங்களது தரப்புக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிய மாநகராட்சிகள், புதிய நகராட்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. பணிகள்  மேலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவைப்படும். எனவே அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். ஆகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

மனுதாரர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறிய மனுதாரர், தற்போது அவகாசம் கேட்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைப்பதற்கு கூறப்படும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்றும் கூறினார். எனினும் தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்க மனுதாரர் தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் மட்டுமே வழங்கி உத்தரவிடுவதாக  நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி வரும் ஜனவரி மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories:

>