பிஇ, பிடெக் பொதுப்பிரிவுக்கான கவுன்சலிங் இன்று தொடக்கம்: 1.36 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

சென்னை: பிஇ, பிடெக் பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 17ம் தேதி வரை நான்கு சுற்றுகளாக நடக்கும் இந்த கவுன்சலிங்கில் 1 லட்சத்து 36 ஆயிரம்  மாணவ- மாணவியர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளனர். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள 404 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டில், பிஇ மற்றும் பிடெக் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கடந்த ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 1 லட்சத்து 74 ஆயிரத்து 490 மாணவ- மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 45  ஆயிரத்து 45 பேர் மட்டுமே கவுன்சலிங் கட்டணத்தை செலுத்தியிருந்தனர். மேலும், 2,722 பேர் இணையதளம் மூலம் சான்றுகளை பதிவேற்றம் செய்யவில்லை. அவர்களையும் சேர்த்து 3,290 பேர் விண்ணப்பங்கள் தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் பொதுப்பிரிவினர் என்று பார்த்தால் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேர் கவுன்சலிங்கில் தகுதி பெற்றுள்ளனர். இதனால், அவர்கள் கலந்து கொள்ள வேண்டிய கவுன்சலிங் அட்டவணையை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ளது. இது நான்கு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கவுன்சலிங்கின்போது, கட்டணம் செலுத்த 2 நாட்கள், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவுகளை உறுதி செய்ய 2 நாட்கள், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை உறுதி செய்ய 1 நாள் என ஒவ்வொரு சுற்றுக்கும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் கல்வி பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கவுன்சலிங்கும் இன்று தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது.

யாருக்கு எப்போது கவுன்சலிங்

சுற்று    ரேங்க்        கவுன்சலிங் தேதி

1     1-14,788    செப்.27ம் தேதி

2    14,789- 45,227    அக்.1- 9 வரை

3    45228- 86228    அக்.5-13 வரை

4     86119    -136973    அக். 9-17

Related Stories: