தமிழகம் முழுவதும் நேற்று 3ம் கட்ட முகாம் ஒரே நாளில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டார்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 3ம் கட்ட தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடந்தது. 24.85 லட்சம் பேர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நேற்று 20 ஆயிரம் இடங்களில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 3ம் கட்ட தடுப்பூசி முகாமில் மொத்தம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி திட்டமிட்டதை விட 24 லட்சத்தை 85 ஆயிரத்து 814 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 2 லட்சத்து 13, 763 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 91,350 தடுப்பூசிகளும், 19ம் தேதி நடைபெற்ற 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2,931 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம்-தட்சணாமூர்த்தி திருமண மண்டபம், அயனாவரம்-நேரு திருமண மண்டபம் மற்றும் அயனாவரம் சாலை-பெத்தேல் பள்ளி உள்பட ஐந்து இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம், தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: