நீர்மின்நிலையங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 20,359.48 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி: காற்று மாசு குறைப்பதில் மின்வாரியம் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் காற்று மாசு அடைவதை குறைக்கும் வகையில், மரபுசாரா எரிசக்தியான சூரியசக்தி, புனல், காற்றாலை மின்சாரத்தில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 5 ஆண்டில் நீர்மின்நிலையங்கள் மூலம் 20,359.48 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின்இணைப்பு சுமார் 2 கோடி, வணிகம் சார்ந்த இணைப்புகள் 35 லட்சம், தொழிற்சாலைகளுக்கு 7 லட்சம், விவசாய இணைப்புகள் 21 லட்சம் என மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. தடையில்லாமல் மின்சாரம் அளிக்க தமிழக மின்வாரியத்துக்கு 15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழக மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. அதற்கு அடுத்து, காற்றாலை, சூரியசக்தி, நீர்மின்நிலையங்கள் உள்ளன.

இதில் காற்று மாசு ஏற்படாத வகையில் மின்சார உற்பத்திக்கு உதவுவது நீர் மின்நிலையங்கள் மட்டும்தான். அந்தவகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமாக 47 புனல் மின்நிலையங்கள் ஈரோடு, காடம்பாறை, குந்தா மற்றும் திருநெல்வேலி புனல் மின் உற்பத்தி வட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் நீர்பாசனம் மற்றும் நீர்பாசனம் அல்லாத நீர்தேக்கம் மூலம் புனல் மின்சாரம் தலா, 891.25 மெகாவாட், 1030.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்நிலையில், 2021-22ம் ஆண்டில் ஒன்றிய மின்சார ஆணையம் நீர்ணயித்த நீர்மின் உற்பத்தி இலக்கு 3,853.74 மில்லியன் யூனிட் ஆகும். இதில், ஜூலை 2021 வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நீர் மின் நிலையங்களின் உற்பத்தி 1,475.80 மில்லியன் யூனிட் ஆகும்.

புனல் மின்சாரம் தயாரிக்கும்போது மாசுபாடு இருக்காது என்பதால் நீர் மின்உற்பத்தியில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20,359.48 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் நீர் மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையிலும் வாரியம் முக்கியத்துவம் காட்டி வருகிறது. அதன்படி தற்போதுள்ள அனைத்து நீர் மின்நிலையங்களும் மிகவும் பழமையானதாகும்.

இதற்காக புனல் மின்நிலையங்களை புதுப்பித்தல், நவீனமயமாக்குதல் மற்றும் செயல்திறன் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மோயாறு, கோதையார் நீர் மின்நிலையங்களில் புதுப்பித்தல், நவீனமயமாக்குதல் மற்றும் செயல்திறன் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் மற்ற இடங்களிலும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான பணிகளின் மூலம் நீர் மின்நிலையங்களில் உற்பத்தியை அதிகரிப்பதால் தமிழகத்தில் மின்உற்பத்தியின் போது மாசுபாடு குறையும். எனவே இதற்கான பணியில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

5 ஆண்டுகளில் நீர் மின்உற்பத்தி விவரம்

ஆண்டு        மின்உற்பத்தி (மில்லியன் யூனிட்)

2016-17     2505.23

2017-18        2674.53

2018-19        5257.57

2019-20        4780.37

2020-21        5141.78

Related Stories: