ஆணவக்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை நடைமுறைபடுத்த வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி- முருகேசன் தம்பதியை, கண்ணகியின் பெற்றோர் கடத்திச் சென்று அவர்களை படுகொலை செய்தனர்.  இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கண்ணகியின் சகோதரருக்கு தூக்குத் தண்டனையும், அவரது தந்தை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதை விசிக வரவேற்கிறது. ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாக கண்டறியவேண்டும். அந்த பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அண்மையில் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாநில விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென்றால் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதொன்றே வழியாக இருக்கும். எனவே, இனியும் தாமதம் செய்யாமல் ஆணவக் கொலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைக்கு முதல்வர் உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

Related Stories: